சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தை தடுப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு நடத்திய நிபுணர் குழு, அதற்கான அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை சாதாரண மழைக்கே கடுமையாக பாதிக்கப்பட்டு, மழைநீர் தேங்கி மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறி வருகிறது. இதையடுத்து, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம், சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவில் காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜனகராஜன், மும்பை ஐ.ஐ.டி கட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழக மனித குடியமர்வு மைய இயக்குநர் பிரதீப் மோசஸ், சென்னை அண்ணா பல்கலைக்கழக ரிமோட் சென்சிங் நிறுவனப் பேராசிரியர் திருமலைவாசன், சென்னை ஐ.ஐ.டி கட்டுமானப் பொறியியல் துறையின் தலைவர் பாலாஜி நரசிம்மன் உள்பட 14 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர், கடந்த 15 ஆண்டு களில் சென்னையில் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டன, அதனை எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ததுடன், மேலும் பல இடங்களுக்கு சென்று நேரடி ஆய்வு நடத்தி இடைக்கால அறிக்கை தயாரித்தனர்.
இந்த நிலையில், இன்று தலைமைச்செயலகத்தில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.