சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னை இந்த வருடத்தில் 2வது முறையாக மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது.
நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சென்னை மீண்டும் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. பெரும்பாலான சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து செயல்பட முடியாத நிலையில், பல சுரங்கப்பாதைகளும் நிரம்பியதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டும், பல பகுதி களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிட்டன. இதையடுத்து, ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வாரி யிறைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கொளத்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் உள்பட வெள்ளத்தால் தத்தளிக்கிறது. தி.நகர் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளன. குறிப்பாக தி.நகர் பகுதியில் மழைநீர் வெள்ளமாக பாய்ந்தோடுகிறது. இதனால் மேட்லி ரோடு, ரங்கராஜ புரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு, போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற சுரங்கப்பாதைகளும் மழைநீரால் நிரம்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
தென்சென்னையின் ஓஎம்ஆர் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அடையாறு உள்பட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. குறிப்பாக ஓஎம்ஆர் சாலை அருகே உள்ள ஓக்கியம், செம்மஞ்சேரி பகுதி மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் புளியந்தோப்பு பகுதியிலும் மழை வெள்ளம் ஆரோக பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, குக்ஸ் ரோடு, டிகாஸ்டர் ரோடு உள்பட பல சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து, பெதுமக்கள் தங்குவதற்காக சென்னையில் பல இடங்களில் அரசு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு உதவி வருகிறது. பல பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது.