சென்னை: ரூ.400 கோடியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன மயமாக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் பலஅடுக்கு பார்க்கிங் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100ஆண்டு கால பழமையான ரயில்களில் சென்னை எழும்பூர் ரயில்நிலையமும் ஒன்று. இந்த ரயில் நிலைம் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டது. 1908-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கிருந்து 11 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 30-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் வந்து செல்கின்றன. கூடுதல் ரயில்கள் இயக்க போதுமான வசதி இல்லை. இதனால், மற்றொரு ரயில் முனையமாக தாம்பரத்தை மாற்றும் பணியில் ரயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், எழும்பூர் நிலையத்தை ரூ.400 கோடி செலவில் நவீனப்படுத்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இணையாக அனைத்து வசதிகளும் கொண்டு நவீன ரயில் நிலையமாக மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம், பூந்தமல்லி சாலையில் எழும்பூர் ரயில் நிலைய முகப்பில் புதிய அலுவலகம் கட்டப்படவுள்ளது. பார்சல்களை கொண்டு செல்ல நகரும் பாலம் அமைக்கப்படவுள்ளது. இதைத் தவிர்த்து நடைபாதைகள், நடை மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட வுள்ளது. இந்த பாரம்பரிய கட்டிடத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இதைப்போன்று புதிய பார்சல் அலுவலகமும் கட்டப்பட வுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள பழைய கட்டிமும் புனரமைக்கப்பட உள்ளது. அத்துடன் கட்டப்பட உள்ள புதிய வளாகத்தில் பல்அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்ளவதற்கான டெண்டர் தெற்குரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.