காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, சுவை மற்றும் வாசம் தெரியாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மாநகராட்சி பரிசோதனை கூடங்களுக்கோ அல்லது தனியார் பரிசோதனை மையங்களிலோ கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அனைவரும் சந்தேகத்திற்கு உரிய நபராக அடையாளப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று சங்கிலியை முறிக்க புதிய வழிமுறைகளை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளவும், தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்க மருத்துவர்களை பணியமர்த்தவும், பரிசோதனை மையங்களுக்கு சோதனைக்காக வருபவர்களுக்கு தேவையான அடிப்படை மருந்துகளை இலவச வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த இருக்கிறது.

வீடுவீடாக சென்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு பாதிப்பு ஏதும் இருந்தால் வீட்டுத் தனிமையிலோ அல்லது பராமரிப்பு மையங்களுக்கோ செல்ல பரிந்துரைப்பதுடன் அதற்கான நடவடிக்கை எடு்க்கப்படும்.

மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், இடநெருக்கடி மற்றும் குறுகலான இடங்களில் வசிப்பவர்களை பராமரிப்பு மையங்களுக்கு சென்று தங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளோம், தற்போது இந்த மையங்களில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

முதல் அலையை விட இரண்டாவது அலையில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதால் அனைவரும் அரசு வழங்கியுள்ள நிலையான வழிகாட்டுதலின்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் 300 பேரை பயிற்சி மருத்துவர்களாக நியமித்து வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை கண்காணித்து தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசணை வழங்க 15 மண்டலங்களிலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.