சென்னை: வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஏசி வசதியுடன் கூடிய 24 மணி நேர ஓய்வை அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி  மற்றும் அதில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் நலனுக்காக சென்னை மாநகராட்சி அவர்களுக்கு எசி வசதியுடன் கூடிய  ஓய்வறை அமைக்க திட்டமிட்டு உள்ளது.  பெண் தொழிலாளர்கள் குளிரூட்டப்பட்ட ஓய்வு பகுதிகளால் அதிக பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை வீட்டில் சமைக்காமல் உணவு நிறுவனங்களிடம் இருந்து ஆன்லைன் டெலிவரி சேவைகள் மூலம் பெற்று வருகின்றனர். இந்த வணிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  சென்னையில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன, குறிப்பாக ஸ்விக்கி, ஜோமேட்டோ போன்ற தளங்கள் மூலம் பல உணவகங்கள் தங்கள் உணவுகளை டெலிவரி செய்கின்றன.

ஸ்விக்கி (Swiggy), ஜோமேட்டோ (Zomato), பூக்லே (Bhookle) போன்ற டெலிவரி நிறுவனங்கள் மட்டுமின்றி பல உணவங்கள் நேரடியாகவும் டெலிவரி செய்து வருகின்றன. Zomatoவில், அதிக எண்ணிக்கையிலான பெண் டெலிவரி பார்ட்னர்களும் உள்ளனர். இவர்கள் மூலம், பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் அவர்கள் விரும்பும் உணவகங்களில் இருந்து எளிதாக பெற முடிகிறது. இதை முதியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். தற்போது கொளுத்தும் வெயிலிலும் பலர் தங்களது உணவு டெலிவரி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உணவு டெல்லி ஊழியர்களின் கஷ்டங்களை போக்கும் வகையில்,  சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்காக சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை அமைக்க  சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 

அதன்படி முதல்கட்டமாக,  அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில்  ஏசி ஓய்வறை அமைக்க   திட்டமிட்டுள்ளது. இந்த அறையில்,    கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி  அமைக்கப்பட உள்ளது.

உணவு டெலிவரி பணியில் ஏராளமான பெண்களும் பணியாற்றி வருவதால், அவர்களின் கஷ்டத்தை புரிந்துகொண்டு,  பணியில்லாத சமயத்தில் அவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் வகையில் ஏசி அறையை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.