சென்னை: சென்னை  மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. 218 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 7 வார்டுகளுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் பதவியேற்று வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை 9மணி முதல் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகம் வரத் தொடங்கினர். அவர்கள் சான்றிதழை சரிபார்த்து அதிகாரிகள், அவர்கள் மாமன்றத்தில் அமர வேண்டிய இருக்கை குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து காலை 10 மணி அளவில் பதவி ஏற்பு விழா தொடங்கியது.

கவுன்சிலர்கள் பதவிப்பிரமாணம் செய்யும்போது, திமுக கவுன்சிலர்கள் பதவிப் பிரமாணத்தின் போது ‘கலைஞர்’ கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டினர், அதே நேரத்தில் தனியரசு போன்ற சிலர் இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். அதிமுக உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராகுல் காந்தியை அதிமுக உறுப்பினர்கள் பாராட்டினர்

இதுபோல, மாநிலம் முழுவதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 12ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்று வருகின்றனர்.