சென்னை: சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு வழங்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஒத்திகை பார்த்தது. மேயர் பிரியா முன்னிலையில், மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் வளாகத்தில் இதற்கான ஒத்திகை நடைபெற்றது.

 வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும்- நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை (அக். 17) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது, முன்னதாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் 12 கி.மீ. ஆக சற்று அதிகரித்துள்ளது,

இதனால்,   சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்க மழை நீடிக்கும்- வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

இதனால்,  தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுபோல,  பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என மக்கள் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய மாநகராட்சி  திட்டமிட்டு உள்ளது. அதற்கான ஒத்திகை இன்று காலை  சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடத்தப்பட்டது