சென்னை
ஏற்கனவே கடந்த காலங்களில் மழை நீர் தேங்கி இருந்த 144 இடங்களில் ரூ.144 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் விரைவில் மேற்கப்பட உள்ளன.
தற்போது சென்னையில் மழைக்காலம் முடிவுக்கு வர உள்ளது. அடுத்த பருவத்துக்கு முன்பு மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சென்னை மாந்கராட்சி தீவிர முயற்சி எடுத்துள்ளது. சென்னை மாந்கராட்சி இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சென்னை நகரில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்காமல் நீர்வழிக்கால்வாய்களின் மூலம் கடலில் சென்று கலக்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கிய பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களின் ஆலோசனைகளின்படி, விடுபட்ட மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களைப் புனரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டு, அதுகுறித்து விரிவான திட்ட அறிக்கை அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
முதற்கட்டமாகச் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளான தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் 45 கி.மீ. நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் விடுபட்ட மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களைப் புதுப்பிக்கவும் மற்றும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளவும் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சீரிய முயற்சியால் இத்திட்டப் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் சார்பில் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு நீடித்த, நிலையான நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 144 இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ஒப்பம் கோரப்பட்டுப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.