ராமேஸ்வரம்

மிக்ரான் குறித்த அச்சுறுத்தல் இருந்த போதிலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

தற்போது கிறிஸ்துமஸ், வார விடுமுறை மற்றும் பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்குச் சுற்றுலா வருகின்றனர். பயணிகள்  ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குளித்து ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.  இதையொட்டி நேற்று தை அமாவாசை நாட்களில் ஏற்படும் கூட்டம் போல் இருந்தது.

தவிர புயலால் அழிந்த தனுஷ்கோடி, நாட்டின் எல்லைப்பகுதியான அரிச்சல்முனை கடற்கரையை ரசிக்கவும், பாம்பன் பாலம் மற்றும் ரயில் பாலத்தை ரசிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.  இங்கு தமிழகம் மட்டுமல்லாது வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நேற்று ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.

தவிர ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி கடலில் குளித்த சுற்றுலாப் பயணிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தற்போது ஒமிக்ரான் பரவி வரும் நிலையிலும், பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாகக் கூடியது கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என ராமேஸ்வரம் மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.