சென்னை

ந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு ரூ.5000 வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வருடத்துக்கு இரண்டு தவணைகளாகச் சொத்து வரி விதித்து வருகிறது.   அவ்வகையில் தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.   இந்த வரியை இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனக் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு வரியில் 5% வரை ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது.  இந்த ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5000 வரை பெற முடியும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.   இந்த காலக் கெடுவுக்குப் பிறகு வரி செலுத்துவோர் வரியுடன் ஆண்டுக்கு 2% வட்டியும் சேர்த்துச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரியாக 375 கோடியே 59 லட்சம் ரூபாய், தொழில் வரியாக 225 கோடியே 13 லட்சம் ரூபாய் என மொத்தம் 600 கோடியே 72 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.