சென்னை: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத சென்னை மாநகராட்சி ஊழியருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  தன்னார்வ தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கமானது, சென்னை மாநகராட்சியிடம் சில தகவல்களை வழங்குமாறு 2018ம் ஆண்டு முதல் கோரி வந்தது. ஆனால் மாநகராட்சியின் பொது தகவல் அதிகாரியாகவும், பொறியாளராகவும் இருந்த விக்டர் ஞானராஜ் என்பவர் அந்த தகவல்களை வழங்காமல் தாமதப்படுத்தி உள்ளார்.

இது குறித்து, தமிழக மாநில தகவல் ஆணையத்தை அறப்போர் இயக்கம் நாடியது. இதையடுத்து, கடமை தவறியதாக பொறியாளர் விஜயகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிர்வாக பொறியாளராக இருந்த விக்டர் ஞானராஜூக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

எந்தவொரு தகவலும் இரண்டரை ஆண்டுகளாக இல்லை. இந்த அபராதம் மற்றும் நடவடிக்கைகள் குறைந்தபட்சம் தகவல் அறியும் சட்டத்தை மீறும் மற்றும் குடிமக்களுக்கு தகவல்களை மறுக்கும் அனைத்து பொது தகவல் அதிகாரிகளுக்கும் ஒரு பாடமாகும் என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.