சென்னை

சென்னையில் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை நடத்த வரும் போது ஒத்துழைப்பு அளிக்க சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டது.  இதனால்  பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வந்தது.  ஆயினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருகிறது.  குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்துக் காணப்படுகிறது.

நேற்று சென்னையில் 197 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 5.39 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதில் 8,327 பேர் உயிர் இழந்து, 5.29 லட்சம் பேர் குணமடைந்து தற்போது 1,887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனா பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் கொரோனா சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் & பணியாளர்கள் நாள்தோறும் வந்து செல்லக்கூடிய இடங்களான அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் & மார்க்கெட் பகுதிகளில் RTPCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்களது பகுதிகளில் மாநகராட்சி சார்பில் RTPCR பரிசோதனை மேற்கொள்ள வரும்பொழுது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.