மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையில் புதிய தொழில்நுட்பம் மூலம் சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் மேடாக உள்ளதால் சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படுகிறது.
தானியங்கி இயந்திரத்தின் மூலம் இந்த பள்ளங்களை சீர் செய்து சாலையமைக்க உதவும் இயந்திரத்தை பயன்படுத்த இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இயந்திரம் முதல் கட்டமாக பள்ளங்களில் வேகமாக காற்றை அடித்து அதில் உள்ள தூசி தும்புகளை அப்புறப்படுத்தும் அடுத்ததாக தாரை லேசாக அந்த பள்ளங்களில் பீய்ச்சி அடிக்கும் பிறகு ஜல்லி தார் கலவையை பள்ளத்தில் நிரப்பி கடைசியாக அதை சமன் செய்யும்.
15 நிமிடத்தில் சாலைகளை சீரமைக்க கூடிய இந்த நான்கு நிலைகளைக் கொண்ட இயந்திரம் மூலம் அழுத்தம் மற்றும் ஜல்லி கலவையில் காற்று இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் தரமான சாலைகள் அமைக்க உதவுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக சென்னையில் உள்ள 471 பேருந்து வழித்தடங்களில் மழை காலத்திற்கு முன்பு சாலை சீரமைப்பு பணிகள் தொடங்க உத்தேசித்திருப்பதாக கூறியுள்ளனர்.
மழை காலம் முடிந்த பிறகு உட்புற சாலைகள் அனைத்தும் இந்த இயந்திரங்கள் மூலம் சீர் செய்யப்பட உள்ளது.
இந்த இயந்திரங்கள் மூலம் 10 சதுர மீட்டர் சீரமைக்க ரூ. 1,450 செலவாகும் என்றும் இதற்கு முன் இதே அளவு சீரமைக்க ரூ. 22,000 செலவானதாக குறிப்பிட்டுள்ளனர்.
புதிய தொழில்நுட்பம் கொண்டு சாலைகளை சீரமைக்கும் பணிக்காக ரூ. 3 கோடி அளவிலான ஒப்பந்த புள்ளி அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மழைக்காலத்தில் பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதே இந்த முயற்சியின் நோக்கம். “புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நீடித்த தரமான சாலைகளை வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.