சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி  சார்பில் 2 வாகனங்களில்  நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.  சென்னை ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா கொடியசைத்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  பேய்மழை கொட்டியது. தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழைக்கு, இதுவரை கண்டிராக அளவுக்கு இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின,  இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள  ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளதால் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.  அங்கு மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில்,  கனமழையினால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய 2 வாகனங்களை, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா பார்வையிட்டு, கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்க அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தேங்கிய மழைநீரை அகற்ற 100 எச்பி திறன் கொண்ட 12 டீசல் பம்புகள், 50 எச்பிக்கு கீழ் திறன் கொண்ட 29 டீசல் மோட்டார் பம்புகள் மற்றும் 30 மின் மோட்டார் பம்புகள் என மொத்தம் 71 மோட்டார் பம்புகள் சென்னை மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 29 மோட்டார் பம்புகள் அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரொட்டி, பிஸ்கெட், பால் பவுடர், குடிநீர் பாட்டில்கள் மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை 2 வாகனங்களின் மூலம் அனுப்ப தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதுதவிர கப்பற்படையின் ஹெலிகாப்டர் மூலமாகவும் நிவாரணப் பொருட்கள் இன்று (டிச.19) காலை அனுப்பப்பட்டது. சென்னை மாநகராட்சியின் இயந்திரப் பொறியியல் துறையில் 4 செயற்பொறியாளர்கள் தலைமையிலான 16 பேர் அடங்கிய 4 குழு, மின்துறையின் சார்பில் செயற்பொறியாளர் தலைமையில் 7 பேர்கொண்ட ஒரு குழு என மொத்தம் 23 பேர் நிவாரணப் பணிகளுக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார். மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.