சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த நம்ம சென்னை ஆப், பேடிஎம், QR code என பல வழிகளை அறிமுகம் செய்துள்ளது.

2022 – 23 இரண்டாம் அரையாண்டுக்கான (அக்டோபர் ’22 – மார்ச் ’23) சொத்து வரி நவம்பர் மாதம் 15 ம் தேதிக்குள் கட்ட வேண்டும் அதற்குப் பின் கட்டுபவர்கள் 2 சதவீதம் அபராதத்துடன் கட்ட நேரிடும் என்று அறிவித்துள்ளது.

முதல் அரையாண்டு சொத்து வரியை செப்டம்பர் 30 க்குள் கட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்றும் தெளிவு படுத்தியது.

வரிசெலுத்துவோரில் கடந்த ஆண்டு 13000 பேர் 50000 ரூபாய்க்கு மேல் வரி செலுத்திய நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 23000 ஆக உயர்ந்திருக்கிறது.

இதனால் இந்த நிதியாண்டில் செப்டம்பர் மாதம் முடிய 620 கோடி ரூபாய் சொத்து வரி வசூலானது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 320 கோடி ரூபாய் வசூலானது.

மொத்தமுள்ள 13.1 லட்சம் வரிசெலுத்துவோரில் 6.9 லட்சம் பேர் முதல் அரையாண்டு வரி செலுத்தியுள்ளனர்.

அதே வேளையில், இரண்டாம் நிதியாண்டுக்கான வரியை அக்டோபர் 15 ம் தேதிக்குள் கட்டுபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதிகபட்சமாக ரூ. 5000 தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் மொத்த வரி செலுத்துவோரில் 40 சதவீதம் அதாவது 5.17 லட்சம் பேர் இந்த அரையாண்டின் முதல் 15 நாளில் வரி செலுத்தியுள்ளனர். இதனால் சென்னை மாநகராட்சி 4.67 கோடி ரூபாய் தள்ளுபடி வழங்கி இருக்கிறது.

மீதமுள்ள வரி பாக்கியை வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ள மாநகராட்சி அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை வரி செலுத்துவோருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்பட மாட்டாது என்றும் நவம்பர் 15 க்குப் பின் வரி செலுத்துவோருக்கு 2 சதவீதம் தண்டம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி வரி வசூலிக்கும் அதிகாரியிடம் காசோலை அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலம் வரி செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வங்கி கவுண்டர்கள், நம்ம சென்னை ஆப், பேடிஎம், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மற்றும் இ சேவை ஆகிய அட்வான்ஸ் பேமென்ட் ஆப்ஷன்கள் மூலமும் வரி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, சொத்து வரி ரசீதில் உள்ள QR குறியீட்டையும் பயன்படுத்தி சொத்து வரி செலுத்தலாம்.