சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் 1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
2024 செப்டம்பர் மாதம் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் சென்னையில் 1.81 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது, 2021ம் ஆண்டு 57,366 தெருநாய்கள் மட்டுமே இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போது சென்னையில் உள்ள தெருநாய்களில் 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் 1.28 லட்சம் நாய்களுக்கு இன்னும் கருத்தடை செய்யவேண்டியுள்ளதாகவும் தெரிகிறது.
தவிர 20 சதவீத நாய்களுக்கு மட்டுமே ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னை தற்போது மாதந்தோறும் 300 தெருநாய்களுக்கு மட்டுமே கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் இது தேவையான எண்ணிக்கையை விட மிகக் குறைவாக உள்ளதாகவும் அதிக எண்ணிக்கையிலான கருத்தடை மையங்களின் தேவை இருப்பதாகவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
தெருநாய்கள் குறித்து புகார் கிடைக்கும்பட்சத்தில் அந்த நாய்களை பிடித்துச் செல்லும் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் நாய்களை வேறு இடங்களில் மொத்தமாக இறக்கி விட்டுச் சென்றுவிடுகின்றனர்.
இதனால், நாய்களுக்கும் ஏரியா ஃபைட் மட்டுமன்றி நாய்க்கடி சம்பவங்கள் மற்றும் நாய்களால் விபத்து உள்ளிட்டவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து நாய்களுக்கு QR-code உடன் கூடிய கழுத்துப்பட்டை மற்றும் RFID microchip ஆகியவற்றை பொருத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக 3500 கழுத்துப்பட்டைகளை வாங்க உள்ளது, இதனால் நாய்கள் ஒரு இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் மாறுவது மற்றும் கருத்தடை செய்யப்பட்டுள்ளதா, தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது போன்ற பலவிவரங்கள் நொடிப் பொழுதில் தெரிந்துகொள்ளலாம்.
தவிர, இந்த QR-codeயை பொதுமக்களும் ஸ்கேன் செய்து மைக்ரோசிப் மூலம் அதன் விவரங்களை அறிந்துகொள்வதோடு வேறு இடங்களில் இருந்து வந்துள்ள புது நாய்கள் குறித்த புகார் அளிக்க வசதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.