சென்னை: ஒவ்வொரு வீட்டிலும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளுக்கு ‘வீட்ல ரெண்டு குப்பைத் தொட்டி அவசியம்’ என சென்னை மேயர் பிரியா அறிவுரை வழங்கி உள்ள நிலையில், தற்போது, கடைகளிலும் இரண்டு வகை குப்பைத் தொட்டிகள் வைக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
சமீபகாலமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காத தனிநபர் வீடுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி ரூ.100/- அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்து உள்ளது.
அதைத்தொடர்ந்து, வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் வகையில், இரண்டு வகையான குப்பை தொட்டிகளை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் இரண்டு வகை குப்பைத் தொட்டிகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள 78,136 கடைகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரு வகையாக பிரித்து குப்பைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 26,242 கடைகள் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருவதாகவும், மீதமுள்ள கடைகளும் இதுபோன்று தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளுக்கு ‘வீட்ல ரெண்டு குப்பைத் தொட்டி அவசியம்’! சென்னை மேயர் பிரியா