சென்னை: ஒவ்வொரு வீட்டிலும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளுக்கு ‘வீட்ல ரெண்டு குப்பைத் தொட்டி அவசியம்’ என சென்னை மேயர் பிரியா அறிவுரை வழங்கி உள்ளார்.

பொதுமக்கள் திறந்த வெளிகளில் குப்பைகளை கொட்டி, அசூத்தம் செய்வதை தடுக்க சென்னை உள்பட நாடு முழுவதும், அரச தரப்பில் இருந்து தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளுடன் பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற பொருட்களும் சேர்வதால், அவை மக்குவதில் சிரமம் உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும்,  துாய்மை பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கும், கடைகள், வணிக நிறுவனங்களுக்குச் சென்று குப்பைகள் சேகரிக்கும்போது,  குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம் பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, சென்னை மாநகராட்சி புதிய முயற்சியாக என் குப்பை, எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வை கையில் எடுத்துள்ளது. முதல்கட்டமாக மணலி பகுதியில் இதுதொடர்பான போட்டி ஒன்றை மேயர் பிரியா தொடங்கி வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மேயர் பிரியாக பதிவிட்டுள்ள டிவிட்டில், ‘எங்கள் வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறேன். என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு சென்னை மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் அந்தந்த ஏரியாவுக்கு வரும் குப்பை வண்டிகளில் இரண்டு வகையான பெட்டிகள் இருக்கும். ஒன்றில் மக்கும் குப்பைகளைக் கொட்ட வேண்டும். மற்றொன்றில் மக்காத குப்பையை கொட்ட வேண்டும்.  என்றும், இதற்கு முதலில், அனைவரும் வீட்டில் இரண்டு குப்பைத் தொட்டிகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.