சென்னை: கொசுப் பெருக்கத்திற்கு காரணமான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக சொமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை மாநகராட்சி.
பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி அதனால் டெங்கு பரவும் வாய்ப்புள்ளது. ஆகவே, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு நடத்திய ஆய்வில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சொமாட்டோ நிறுவன கிளைக்குட்பட்ட கட்டிடத்தின் கூரையில் உணவு விநியோகிக்கப் பயன்படுத்தும் பைகள் எறியப்பட்டிருந்தன. அதில், மழைநீர் தேங்கியிருந்து அதில கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது ஆய்வில் தெரிய வந்தது.
எனவே, இதற்காக சென்னை மாநகராட்சி, அந்நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அவர்களும் தவறை ஏற்று அபராதம் செலுத்தி இனிவரும் காலத்தில் அவ்வாறு நிகழாதென வாக்குறுதி அளித்துள்ளனர்.
இம்மாதம் 10ம் தேதி வரை இதுபோன்ற ஆய்வில் 387 பேர் இவ்வாறான செயலுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு ரூபாய் 20.74 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்நடவடிக்கையானது, குறிப்பிட்ட துறை வருமானம் ஈட்டுவதற்காக மேற்கொளளப்படவில்லை எனவும், பதிலாக மக்களிடையே கொசு உற்பத்தியாகும் காரணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் எனவும் கூறினர்.