சென்னை:
கொரோனா சோதனையில் மாநகராட்சி மெத்தனம் காட்டி வருவதாக, பொதுமக்கள்  அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், மற்ற குடும்ப உறுப்பினர்களை சோதனை செய்யாமல், தவிர்த்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் எடப்பாடி அரசு, கொரோனா சோதனை மேற்கொள்வதை குறைத்து,  பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது அவரது குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.  சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மக்களிடைய கொரோனா தொற்று குறித்து சரிவர சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் ஷாகின்பாத் போராட்டம் நடத்திய ராயபுரம் பகுதி தற்போது கொரோனா பரவலின் உச்சக்கட்டத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, திருவிக நகர், அண்ணாநகர் போன்ற மண்டலங்களி லும் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், தொற்று அதிகமாகி வரும் அண்ணா நகர், அரும்பாக்கம், அயனாவரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் வசிப்பவர்கள், தங்களிடம் சரியான முறையில் கொரோனா சோதனை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும், தேவை யின்றி மற்றவர்கள் சோதனை மேற்கொள்ளத்தேவையில்லை என்றும் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் இந்த மெத்தனமான நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்ட நபர் கடுமை யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
பெயர்  தெரிவிக்க விரும்பாத  இளைஞர் ஒருவர், தான் அரும்பாக்கம் பகுதியில் தனது தாயாருடன் வசித்து வருவதாகவும், தனக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், சோதனை மேற்கொண்ட தாகவும், அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தனது அம்மா உள்பட அருகே உள்ளவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்.

ஆனால், மருத்துவர்களும், சுகாதாரத் துறையினரும், அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். அறிகுறி தென்பட்டால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும், இல்லையேல் தேவையில்லை என்று மறுத்து விட்டதாக கூறியவர், தனது தாயார் 50வயதுக்கு மேற்பட்டவர். கொரோனாவின் தாக்கத்திற்கு வயதானோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது தாயாருக்கும் சோதனை நடத்த வலியுறுத்தினேன், ஆனால் மருத்துவர்கள் மறுத்து விட்டனர்
ஏன் என்று நான் அவர்களிடம் கேட்டேன், அதற்கு உனது தாயாருக்கு கொரோனா  அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே  பரிசோதனை செய்ய முடியும் என்று தெரிவித்து விட்டார்கள்.
தற்போது தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், தனது அம்மா தனியாக வசிப்ப தால், நான்  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்து விட்டதாகவும், ஒருவேளை எனது தாயாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால்,  “யார் அவரை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்?  என்று கூறியவர், இது தங்களது குடியிருப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சங்கடங்களை தவிர்க்க  கார்ப்பரேஷன் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து  அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும், ’’ என்றார்.
இதுபோலன அயனாவரத்தில் உள்ள ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவரது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா சோதனை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தொற்றுநோய் மருத்துவர்கள்,  இந்த கட்டத்தில் சோதனை அதிகமாக இருக்க வேண்டும், ஆனால், சோதனை கருவிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாதபோது, ​​வீட்டு தனிமைப்படுத்தல் போதுமானது என்று தெரிவித்து உள்ளார்.
வீட்டில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர்  சமூக தூரத்தை கடைபிடிக்க வேண்டும், மேலும் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் போன்ற தனித்தனி பாத்திரங்களையும், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகளையும் பயன்படுத்த வேண்டும்.
வயதானவர்கள்  தனிமைப்படுத்தலைப் பயிற்சி செய்ய வேண்டும், அதே நேரத்தில் பெற்றோர்கள் வீட்டில் குழந்தைகளுடன் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் நோய்வாய்ப்பட்டி ருக்கலாம், ஆனால் அவர்கள் அறிகுறியற்றவர்களாக இருப்பதால் வைரஸை பரவலுக்கு காரணமாக அமைந்து விடலாம் என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறும்போது, இதுபோன்ற பரிசோதனை நிகழ்வுகள்  சரி செய்யப்படும்  என்று உறுதி அளித்து உள்ளார்.