சென்னை: சென்னை மாநகராட்சி இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று பிற்பகல் நடைபெற்றது. அபோது, சென்னை மாமன்றத்தில் பேசிய பாஜக உறுப்பினரின் இந்தி குறித்து, சம்பளம் கேட்டு பேசிய பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், சொத்து வரிஉயர்வு குறித்து பேசிய கம்யூனிஸ்டு உறுப்பினரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. மாநகராட்சி மாமன்றத்தில், அனைத்து கட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர், மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதையடுத்து பிற்பகல் விவாதம் நடைபெற்றது.
இதில் அனைத்து கட்சியினரும் பேசினர். அப்போது, மாநகராட்சி மாமன்றத்துக்கு தேர்வாகி வந்துள்ள ஒரே ஒரு பாஜக உறுப்பினரான உமா ஆனந்தன் பேசினார். தனது பேச்சை நமஸ்காரம் என்று கூறி தொடங்கினார். நமஸ்காரம் என்று கூறியதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தமிழில் வணக்கம் என கூறுங்கள் என கூச்சலிட்டனர். ஆனால், அவர் அதை ஒரு பொருட்டாக கருதாமல், தனக்கு தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் தெரியும். இரு மொழிகளும் கலந்து தான் நான் பேசுவேன். எனக்கு இந்தி தெரியாது என்று கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய உமா ஆனந்தன், மாமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் தேவை என்றும் வலியுறுத்தினார்.
அதுபோல, திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் உறுப்பினர் பேசுகையில், தமிழக அரசு உள்ளாட்சி மன்றங்களில் அதிகாரத்தை மீறி சொத்து வரியை உயர்த்தியுள்ளதாகவும், அதை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். எதிர்க் கட்சிகாரன் மாதிரி பேசுறியே என மிரட்டினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக கம்யூனிஸ்டு கட்சியினர் கூட்டணியில் இருந்தாலும் தவறு என்றால் சுட்டிக்காட்ட தயங்குவது கிடையாது. அதுபோலத்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 42 வது வார்டு உறுப்பினர் ரேணுகா மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் பேசும்போது, பட்ஜெட் மீது உறுப்பினர்களுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனே விவாதம் நடத்துவது ஏற்புடையதல்ல, உறுப்பினர்களின் விவாதம் சம்பிரதாயமாக இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் மாநகராட்சிக்கு 788 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை உள்ளது தெரியவருகிறது. மாநகராட்சியின் கடன் விவரம் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை, இதன்மூலம் மாநகராட்சி நிதி நெருக்கடியில் இருப்பது தெரியவருகிறது.
மக்களிடம் அதிக வரி மூலம் வருவாய் ஈட்டுவது சரியல்ல, சொத்து வரி வசூலித்தல் என்பது உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் உள்ளாட்சி மன்றங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசு சொத்து வரியை உயர்த்தி அரசு ஆணை நிறைவேற்றியிருப்பது உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரத்தை மீறும் செயலாகும் என பேசினார்.
அப்போது 14ஆவது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரின் பேச்சை இடைமறித்ததுடன், என்னமோ எதிர்க்கட்சிக்காரன் மாதிரி பேசுறீங்களே, கோரிக்கையை மட்டும் கூறுங்கள் என சத்தமிட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர் தனது கோரிக்கையை மட்டும் கூறினார். ரேணுகா பேசி முடித்த பின்னர் அடுத்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெறும் என துணைமேயர் மகேஷ்குமார் அறிவித்தார்.
மாநகராட்சி மாமன்றத்தில் திமுக கவுன்சிலர்களின் அடாவடி பேச்சு கூட்டணி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.