சென்னை: மேயர் பிரியா தாக்கல் செய்துள்ள மாநகராட்சி பட்ஜெட் 2025-26ல் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப் பட்டு உள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மார்ச் 19ந்தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சியின் வரி விதிப்பு மற்றும் நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, மாநகராட்சி மேயர் பிரியா புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் வெளியிட்ட கல்வித் துறை சார்ந்த அறிவிப்புகள் விவரம் வருமாறு :
சென்னை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், மற்றும் பொது அறிவு ஆகிய பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியர்களைக் கொண்டு, போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து, போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அறிவிப்பு : 1
81 சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் மற்றும் பொது அறிவு ஆகிய பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியர்களைக் கொண்டு, போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள ஆலோசனைகள் வழங்கவும், போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்வதற்காகவும் மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய்15,000/- முதல் ரூபாய் 1,50,000/- வரை என்கிற அடிப்படையில், ரூபாய் 40.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவருக்கு பரிசுகளும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குதல்.
சென்னை பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அதன் அடிப்படையில் வினாடி வினாப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்.
அறிவிப்பு : 2
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து அதனடிப்படையில் குறிப்புகள் தயார் செய்யவும், வினாடி வினாப் போட்டிகள் நடத்திடவும், அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால், தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து, தேர்வுகள் நடத்தப்படும். அவற்றில், வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி மற்றும் மண்டலம் அளவிலான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், அக்குழுவில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதனை மேற்கொள்ளும் வகையில் பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000/- முதல் ரூபாய் 75,000/- வரை 211 பள்ளிகளுக்கு ரூபாய் 86.70 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக “வளமிகு ஆசிரியர் குழு” அமைத்தல்.
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களைக் கொண்டு “வளமிகு ஆசிரியர் குழு” அமைக்கப்படும்.
அறிவிப்பு : 3
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு, மண்டலம் வாரியாக “வளமிகு ஆசிரியர் குழு” (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு, அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான பாடக்குறிப்புகளை தயார் செய்யவும், பயிற்சி வழங்கும் பணிக்காகவும் மதிப்பூதியம் மற்றும் பிற செலவினங்களுக்காக ஒரு மண்டலத்திற்கு ரூபாய் 5.00 இலட்சம் வீதம் 15 மண்டலங்களுக்கு ரூபாய் 75.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு புவி உருண்டை (Globe) வழங்குதல்.
சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வகுப்பறை ஒவ்வொன்றுக்கும் ஒரு புவி உருண்டை (Globe) வழங்குதல்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் : கல்வித்துறைக்கான 16 அறிவிப்புகள் என்னென்ன? – விவரம் உள்ளே!
அறிவிப்பு : 4
சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் புவியியல் பாடத்தினை எளிதாக கற்கும் வகையில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் தலா ஒரு புவி உருண்டை (Globe) வீதம் 2,300 வகுப்பறைகளுக்கு ரூபாய் 39.10 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் பணியமர்த்துதல்.
சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவியர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக தற்காலிக விளையாட்டு ஆசிரியர்கள் பணியமர்த்துதல்.
அறிவிப்பு : 5
பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவியர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும், கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000/- உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000/- என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கென ரூபாய் 2.34 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்.
சென்னை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ள மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக அப்பள்ளிகளில் பணிபுரியும் விளையாட்டு ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், அப்பள்ளிகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்.
அறிவிப்பு : 6
29 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்களில் கூடைப் பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ, கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்களை ஈடுபடுத்தி அவ்விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப ரூபாய் 1.00 இலட்சம் முதல் 1.20 இலட்சம் வரை விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட ரூபாய் 35.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர்நிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்
அறிவிப்பு :7
26 சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில், கூடைப் பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ, கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப ரூபாய் 1.15 இலட்சம் வீதம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட ரூபாய் 30.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
நடுநிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்
அறிவிப்பு : 8
50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி, பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப ரூபாய் 60,000/- வீதம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட ரூபாய் 30.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
நடுநிலைப்பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை சமப்படுத்துதல்.
சென்னை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை சமப்படுத்துதல்.
அறிவிப்பு : 9
50 சென்னை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஒவ்வொன்றும் தலா ரூபாய் 60,000/- என்ற அடிப்படையில் சமப்படுத்தி சீரமைக்க, ரூபாய் 30.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியருக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்குதல்.
சென்னை பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் போது அவர்களுக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்குதல்.
அறிவிப்பு : 10
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியர்களைத் தேர்வு செய்து, அவர்கள் தடகளம் மற்றும் குழுப்போட்டிகளில் மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் மொத்தம் 62.55 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை பங்கு பெறும் மாணவ மாணவியர்களுக்கு தரமான Sports Shoes வழங்குதல்.
தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை பங்கு பெறும் சென்னை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தரமான Sports Shoes வழங்குதல்.
அறிவிப்பு : 11
சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மாணவ மாணவியர்கள், தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை பங்கு பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 2,500/- மதிப்பிலான தரமான Sports Shoes வழங்க ரூபாய் 25.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மகளிருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி இலவசமாக வழங்குதல்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மகளிருக்கு, சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி இலவசமாக வழங்குதல்.
அறிவிப்பு : 12
மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கிட, ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மையம் அமைத்திட, மண்டலம் ஒன்றுக்கு ரூபாய் 50.00 இலட்சம் வீதம் 15 மண்டலங்களுக்கு ரூபாய் 7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மழலையர் பள்ளி வகுப்பறைகளில் மின்னணுப் பலகைகள் (Display) நிறுவுதல்.
சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும், மழலையர்களின் பாடத்திட்டங்களுக்கேற்ப, அவர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு திரையில் காண்பிக்கும் விதமாக ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒரு மின்னணு பலகை (Display) நிறுவுதல்.
அறிவிப்பு : 13
சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000/- வீதம் ரூபாய் 1.66 கோடி மதிப்பில் நிறுவப்படும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காட்சி வழியாகப் பாடங்களை விளக்கிட பெரிய அளவிலான மின்னணு பலகைகள் (Display) நிறுவுதல்.
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காட்சி வழியாகப் பாடங்களை விளக்குவதற்கு பெரிய அளவிலான மின்னணு பலகைகள் (Display) நிறுவுதல்.
அறிவிப்பு : 14
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காட்சி வழியாக பாடங்களை விளக்குவதால் அம்மாணவர்கள் அதனை எளிதில் புரிந்து கொண்டு, தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிடும் வகையில் 81 பள்ளிகளுக்கு தலா இரண்டு வீதம் 162 பெரிய அளவிலான மின்னணு பலகைகள் (Display) தலா ரூபாய் 40,000/- மதிப்பீட்டில் வாங்கி நிறுவ ரூபாய் 64.80 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்தல்.
சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி Management & Entrepreneurship and Professional Skills Council (MEPSC) என்ற சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் பயிற்சி வழங்கப்படும்.
அறிவிப்பு : 15
சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும். இதற்கென ரூபாய் 20.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மழலையர் பள்ளி வகுப்பறைக்கு பல வண்ணங்களில் மேஜை மற்றும் நாற்காலிகள் வழங்குதல்.
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் மழலையர் வகுப்புகளில் (LKG மற்றும் UKG) குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க ஏதுவாக அவ்வகுப்பறைகளின் சுவற்றில் வர்ணம் பூசுதல், விளக்கப்படங்கள், மரச்சாமான்கள் பொருத்துதல், சுவற்றில் வண்ணப்படங்கள் வரைதல் மற்றும் குழந்தைகள் அமர்வதற்காக பல வண்ணங்களில் வட்ட மேசைகள் மற்றும் நாற்காலிகள் அமைத்துக் கொடுத்தல்.
அறிவிப்பு : 16
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 100 பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் வகுப்பறைகளில் (LKG மற்றும் UKG) குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க ஏதுவாக அவ்வகுப்பறைகளின் சுவற்றில் வர்ணம் பூசுதல், விளக்கப்படங்கள், மரச்சாமான்கள் பொருத்துதல், வண்ணப்படங்கள் வரைதல், குழந்தைகள் அமர்வதற்காக பல வண்ணங்களில் வட்ட மேசைகள் மற்றும் நாற்காலிகள் அமைத்துக் கொடுக்க ரூபாய் 3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.