சென்னை:
ப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்னை மாநகராட்சி மேயராக இளம் பட்டதாரி பெண் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக, சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தலித் பெண் மேயர் இவராவார். மேயராக தேர்வு செய்யப்பட்டது முதலே பிரியா பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார்.
வரும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், 2022-23 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்டம்(பட்ஜெட் தாக்கல்) சமர்பிப்பதற்கான கூட்டம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நடைபெறுகிறது. மேலும்,பட்ஜெட் மீதான விவாதம் அன்றைய தினமே நடைபெற்று கூட்ட இறுதியில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சி தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில்,2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்கிறார்.இதனால்,அனைத்து கவுன்சிலர்களும் இந்த பட்ஜெட் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சென்னை மேயர் பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.