நெட்டிசன்:

வழக்கறிஞர் சுந்தர்ராஜன் அவர்களது முகநூல் பதிவு:

ந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் அதிவேகமாக மின்னணுத் தொழில்நுட்பத்தில் இணையம் மூலமாக இணைக்கப்படுகின்றன.

உண்மையிலேயே இது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, வழக்காடும் மக்களுக்கும் பயன்படும் நல்ல திட்டம்தான்.

ஆனால் அதன் தொடக்க நிலையில் சில நகைச்சுவை சம்பவங்களும் நடந்தேறுகின்றன.

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கு குறித்து தேடியபோது அந்த வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தது. மனுதாரரின் வழக்குரைஞரான எனக்கே தெரியாமல் அந்த வழக்கு எப்படி முடிக்கப்பட்டது என்று உற்று நோக்கியபோதுதான் இந்த நகைச்சுவை விவரங்கள் கிடைத்தன.

குறிப்பிட்ட வழக்கு கடைசியாக விசாரணைக்கு வந்தநாள்: 25-12-2017. அதாவது கிறிஸ்துமஸ் நாள். அன்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை நாள்.

வழக்கு முடிக்கப்பட்டதாக கணினி தகவல்

அந்த வழக்கு தீர்க்கப்பட்ட நாள் 15-01-2018. ஆமாம்…! இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் பொங்கல் நாளன்று அந்த வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டதாக நீதிமன்ற இணையதளம் கூறுகிறது.

ஒருவேளை காலத்தை கடந்து செல்லும் “டைம் மெஷின்” போன்ற இயந்திரங்களில் பயணம் செய்து எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே இணையத்தில் அப்டேட் செய்தார்களா  என்று தெரியவில்லை.

வழக்கறிஞர் சுந்தர்ராஜன்

நீதிமன்ற நாட்குறிப்பில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளாக வேறொரு நாள் குறிக்கப்பட்டுள்ளது.

எதன் அடிப்படையில் இந்த இணையதள தகவலை வலையேற்றினார்கள் என்பது தெரியவில்லை.

நல்லவேளையாக என் கட்சிக்காரர் இந்த இணையத்தை பார்த்துவிட்டு, “நான் தொடுத்த வழக்கை எனக்கே தெரியாமல் நீதிமன்றம் எப்படி முடித்துவைக்க முடியும்? அதுவரை நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று சண்டைக்கு வரவில்லை.”