சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாவட்ட ஆட்சிய விஜயராணி, ஜெயலலிதாவின் வாரிசுகளான  தீபா மற்றும் தீபக்கிடம்  இன்று ஒப்படைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்தோட்ட இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற கடந்த அதிமுக அரசு அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. இதை எதிர்த்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் கடந்த நவம்பர் 24ந்தேதி தீர்ப்பு வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக அறிவித்த அரசாணைகளை ரத்து செய்வதாகவும், வீட்டின் சாவியை அவரது வாரிசுதாரர்களிடம் மூன்று வாரங்களுக்குள் ஒப்படைக்கவும் கூறியிருந்தார். மேலும், ஏற்கெனவே, மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவகம் இருக்கும்போது, மற்றொரு நினைவு இல்லம், மக்கள் வரிப்பணத்தில் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருந்தாா்.

இதையடுத்து, தீபா, தீபக் சார்பில், சென்னை ஆட்சியரிடம் போயஸ் தோட்ட இல்ல சாவியை ஒப்படைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவுடன் சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பின் நகலும் இணைக்கப்பட்டது.

இதையடுத்து, ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக்கிடம், சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று வேதா நிலையத்தின் சாவிகளை ஒப்படைத்தார்.