சென்னை: தொடர்மழை, பலத்த காற்று காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு உள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், இன்னும் மழை தொடர்வதால் தற்போது மேலும் ஒருநாள் விடுமுறை சில மாவட்டங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்க உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. சென்னை மாநகரமே தீவுபோல காட்சி அளிக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.
இருந்தாலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தண்ணீரை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளையும் (12ந்தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் 130 கி.மீ, புதுவைக்கு 150 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.