சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைக்க போலீசார் முயன்றதால் சென்னை நகரம் முழுவதும் போர்க்களமாக மாறி வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அவர்களை கலைந்து செல்லும்படி இன்று அதிகாலை முதலே போலீசார்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட முடியாது எனவும், தங்களால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கலைந்து செல்ல தொடர்ந்த மறுத்துவரும் இளைஞர்கள், கடற்கரையில் மனிதசங்கிலி அமைத்து  போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

எங்களை நெருங்கி வந்து கலைக்க முயற்சித்தால் நாங்கள் கடலுக்குள் சென்று விடுவோம் எனவும் அவர்கள் போலீசாரிடம் கூறி வருகின்றனர். இருப்பினும் பெண்களையும், குழந்தைகளை யும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக போராட்டடக்காரர்களுக்கு ஆதரவாக இன்று காலை 9.30 மணி அளவில்  திருவல்லிக்கேணி சாலை வழியாக மெரினா கடற்கரையை நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அனுப்பினர்.

நடிகர் லாரன்சும் திருப்பி அனுப்பப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக கடற்கரை பகுதியில் உள்ள மீனவ குப்பங்களை சேர்ந்தவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர்.  போலீசாரை எதிர்த்து அவர்கள் கோஷம் போட்டனர்.

திருவல்லிகேணி மற்றும் பெசன்ட் நகர் பகுதியில் போலீசார் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 5 போலீசார் காயமடைந்தனர்.

இதன் காரணமாக போலீசார் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்துபோக மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பிரயோகித்து வருகின்றனர்.

மேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதை கேள்விப்பட்ட மற்ற கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

பல இடங்களில் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். இதன் காரணமாக சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் மெரினா கடற்கரை மட்டுமல்லாது  சென்னை கலவரக்காடாக காட்சி அளிக்கிறது.