சென்னை:
மெட்ரோ ரயில் சேவைக்காக சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலை ஒரு வழியாக மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு மெட்ரோ ரெயிலுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணிகள் தொடங்கிய போது, சென்னையின் இதய பகுதியான அண்ணாசாலை ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டது. தற்போது மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்தும் நடைபெற்று வரும் நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவழிச்சாலையாக்கப் பட்டு உள்ளது.
சென்னையில் மெட்ரோயில் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக சென்ட்ரல் மூதல் கோயம்பேடு, விமான நிலையம் வரையிலான பணிகள் நடைபெற்று வந்தன.
2வது கட்டமாக 2012ம் ஆண்டு சுமார் 23.1 கிமீ நீளம் கொண்ட முதல் வழித்தடம் வண்ணாரப் பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக சென்னை விமான நிலையம் வரை செல்லும் வழிக்கான பணிகள் தொடடங்கியது. இதன் காரணமாக அண்ணாசாலை ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்து ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து அண்ணாசாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இரண்டு நாட்கள் சோதனை ஓட்டம நடைபெறும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணாசாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
தற்போது ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது.
மாறாக வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.
ஓயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோடில் அனுமதிக்கப்படுகிறது.
ஸ்மித் ரோடு ஒரு வழிப்பாதையாகவே முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதிப்பப்படுகிறது.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி. மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம்.
அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம். பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றம் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணாசாலை சென்றடையலாம்.
மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து (வெஸ்ட்காட் ரோடு) அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டு அடைந்து ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாக செல்லலாம்.
பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை மற்றம் அண்ணா மேம்பாலம் செல்லலாம்.
பின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிகூண்டு வழியாக செல்லலாம்.
பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று ஒயிட்ஸ் ரோட்டிற்கு செல்லலாம்.
அதேபோல், கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திருப்பி அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.
அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
ஓயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.கா சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.