சென்னை: சொத்து வரி செலுத்தாக பிரபல தியேட்டரான ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து, ஜப்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள வரிகளையும் வசூலிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் சென்னையிலும் சொத்து வரியை வசூலிக்க ஆங்காங்கே முகாம்களை சென்னை மாநகராட்சி அமைத்து வரி வசூலை தீவிரப்படுத்தி உள்ளது. 2021-ம் ஆண்டுக்கான 2வது தவணைக்கான வரி கட்டுவதற்கு இன்றே (மார்ச் 31ந்தேதி) கடைசி நாள். இதையடுத்து வரி கட்டும்படி சென்னை மக்களை மாநகராட்சி துரிதப்படுத்தி வந்தது. மேலும் இரவு நேரத்திலும் சொத்து வரி கட்டும் வகையில், முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சொத்துவரி செலுத்துவதற்கு  மேலும்,கால அவகாசம் கொடுப்பது இல்லை என்றும் வரி கட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனங்கள் ஜப்தி செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று வரை ரூ.730 கோடி சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.715 கோடி சொத்து வரியாகவும், ரூ.4.21 கோடி தொழில் வரியாகவும் வந்துள்ளது. இன்று இரவுக்குள் வரி வசூல் ரூ.750 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில், சொத்துவரி மற்றும்கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தால், சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தியேட்டரான  ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்வதாக அறிவித்து தியேட்டருக்கு சீல் வைத்துள்ளனர்.

ஆல்பர்ட் தியேட்டர் நிர்வாகம், சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியாக,51,27,252 ரூபாய் செலுத்த வேண்டியது உள்ளதாகவும், தியேட்டரின் கேளிக்கை வரி ரூ.14 லட்சம் கட்ட வேண்டியது உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சொத்து வரி மற்றும் கேளிக்கை வரி கட்ட தியேட்டர் நிர்வாகத்துக்கு பலமுறை அறிவுறுத்தியும், நோட்டீஸ் அனுப்பியும், தியேட்டர் நிர்வாகம் வரியை கட்டாததால், தியேட்டர் ஜப்தி செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்து, சீல் வைத்துள்ளது.