சென்னை:
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மீதான அழுத்தம் தற்போது குறைந்துள்ளது.
நேற்று வரை சென்னையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10, 645 ஆக உள்ளது. ஆனால், ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் 25,000பேர் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது 40% குறைந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது சரிந்து வருவதால் எங்கள் மீதான சுமை குறைந்துள்ளது, மேலும் தன்னார்வலர்கள் எங்களுக்கு மிகுந்த உதவியாக இருந்துள்ளனர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு அவர்கள் அத்தியாவசியமான பொருட்களை வழங்கி பாதுகாத்து வந்தனர் என்று சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் இப்போது சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம், ஆனால் நகரத்தில் சில மருத்துவமனைகளில் இன்னும் கொரோனா நோயாளிகள் அதிகமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இதே நிலைதான் தொடர்ந்து வருகிறது, குறைந்த அறிகுறிகளே இருந்தாலும் சிறந்த மருத்துவம் பெறுவதற்காக சிலர் மருத்துவமனைக்கு வரத்தான் செய்கின்றனர், தற்போது இன்னும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களை நியமித்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.