விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினத்தில் உள்ள எல் ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி விடியற்காலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்னும் ரசாயன ஆலையில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டது.  இதைச் சுவாசித்த 12 பேர் மரணம் அடைந்தனர்.   அத்துடன் ஆலையின் சுற்றுப்புற கிராமவாசிகளில் 500க்கும் அதிகமானோர்  தோல் பாதிப்பு, மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிப்பு அடைந்தனர்.

ஆந்திர உயர்நீதிமன்றம் தானாகவே முன் வந்து இது குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.   மேலும் இது குறித்து பிறகு அளிக்கப்பட்ட பொது நல மனுக்களும் ஏற்கப்பட்டன.  நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போது உயர்நீதிமன்றம், “எல் ஜி பாலிமர்ஸ் ஆலையை உடனடியாக மூட வேண்டும்.   ஆலை வளாகத்துக்குள் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரனைக் குழுவினரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

இந்த  ஆலையின் இயக்குநர்கள் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது.  அது மட்டுமின்றி இந்த ஆலையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்,  ஆலையில் உள்ள பொருட்கள் உள்ளிட்ட எதையும் இடமாற்றம் செய்யக்கூடாது.    இந்த ஆலை சரியாக பராம்ரிக்கபட்டதா, முறையான சுற்றுச் சூழல் அனுமதியுடன் இயக்கப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.