சென்னை: தொடர் மழையால்  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால்,  ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், 24 அடி உயரமுள்ள ஏரியில், தற்போத 21 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி, ஏரியில்,  இன்று மாலை 4 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக  விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், தலைநகர் சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது.இன்று முழுவதும் விட்டு விட்டு  கனமழை பெய்து வருகிறது. சென்னையின்  நுங்கம்பாக்கம், வடபழனி, தேனாம்பேட்டை, அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்கிறது. பாரிமுனை, சேப்பாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, கோடம்பாக்கம், தியாகராய நகர் , மாதவரம், தாம்பரம், குன்றத்தூர், போரூர், ரெட்ஹில்ஸ் என அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். விட்டுவிட்டு பெய்யும் மழையால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 4 மணி அளவில் 100 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை உள்ளிட்ட அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தொடர் கனமழை காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.