கொச்சின்:

தினமும் இங்க் நிரப்புதல், எழுதும் போது லீக் அடித்தல், கைகளில் இங்க் ஓட்டுதல், சட்டையில் வைக்கும் லீக் ஆகி நாசமாக்குதல் போன்ற காரணங்களால் இங்க் பேனாவுக்கு விடை கொடுத்துவிட்டு, பால் பாயின்ட் பேனாக்களை நாம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

தற்போது சந்தையில் விதவிதமான பால் பாயின்ட் பேனாக்கள் கிடைக்கிறது. எழுதவும் எளிது, பராமரிப்பு சுலபம் என்று பல சவுகர்யங்கள் இதில் இருந்தாலும் சுற்றுசூழலுக்கு இவை பெரிய தீங்கை ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியாமல் போய்விட்டது. தற்போது கேரளா இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டு செயல்பட தொடங்கிவிட்டது என்பதை தி வீக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

சுற்றுசூழலை பாதிக்கும் பால் பாயின்ட் பேனாக்களை பயன்படுத்துவிதில் இருந்து இங்க் (மை) பயன்படுத்தும் முறையை கொண்டு வர கேரளா அரசு முயற்சி செய்து வருகிறது. விலை குறைவாக உள்ள பால் பாயின்ட் பிளாஸ்டிக் பேனாக்களால் சுற்றுசூழலுக்கு பெரிய அளிவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என கேரளா பசுமை மிஷன் தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் இங்க் பேனாக்களை பயன்படுத்த மாநில கல்வி துறை ஊக்குவித்து வருகிறது. இது பால் பாயின்ட் பேனாக்களுக்கு எதிரான போராட்டம் மட்டுமின்றி ‘யூஸ் அண்டு த்ரோ’’ (பயன்படுத்திவிட்டு தூக்கி எறிதல்) கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டமாகும்.

இந்த கலாச்சாரம் தான் சுற்றுசூழலலுக்கு வெகுவான பாதிப்பை ஏற்படுத்துகிறது. விரைவில் தனியார் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இதை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பால் பாயின்ட் பேனாக்களை தடை செய்யவில்லை. இதற்கு பதிலாக இங்க் பேனாக்களை பயன்படுத்த குழந்தைகள் மத்தியில் வலியுறுத்தப்படுகிறது. எதிர்பார்த்ததை விட இதற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது என்ற கல்வி துறை அமைச்சர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

கேரளா பல்கலைக்கழக பேராசிரியர் அச்சுத்சங்கர் கூறுகையில், இது ஒரு பெரிய இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும். பல தரப்பட்ட தாக்கங்கள் இதனால் ஏற்படும். பயன்படுத்திய பிறகு தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு பால் பாயின்ட் பேனாக்கள் பயிற்றுவிக்கின்றன. ஆனால், இங்க் பேனாக்கள் கவனத்தையும், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். இதன் மூலம் குழந்தைகள் வாழ்க்கை குறித்த பெரிய பாடத்தை கற்றுக் கொள்ளும் என்றார்.
கேரளாவில் மொத்தம் 45 லட்சம் மாணவ மாணவிகள் உள்ளனர். இவர்கள் மாதத்திற்கு தலா 2 பால் பாயின்ட் பேனாக்களை பயன்படுத்துகின்றனர். யூஸ் அண்டு த்ரோ கலாச்சாரத்தை பால் பாயின்ட பேனா நிறுவனங்கள் ஊக்குவிக்கிறது. இன்னும் சீன நாட்டு பால் பாயின்ட் பேனாக்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. அதனால் மொத்தமாக இந்த பேனாக்களை மாணவர்கள் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மலையாள மொழி பள்ளியை சேர்ந்த ஜெஸி நாராயணன் கூறுகையில், இங்க் பேனாக்கள் அசவுகர்யத்தை ஏற்படுத்துகின்றன. நீண்ட கால பயன்பாடு என்பது சிறந்தது தான். எங்களது பள்ளியில் அனைவரும் இங்க் பேனாக்கள் தான் பயன்படுத்துகின்றனர். பால் பாயின்ட் பேனாக்களில் இருந்து இங்க் பேனாவுக்கு மாற்றி குழந்தைகளை இயற்கையோடு ஒன்றிணைக்கவே இந்த திட்டம் என்றார்.
இந்த திட்டத்திற்கு சில பஞ்சாயத்து நிர்வாகங்களும், சில பள்ளிகளும் ஆதரவு அளித்துள்ளது. நன்கொடையாளர்கள் மூலம் இங்க் பேனாக்களை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கரகுளம் பஞ்சாயத்து தலைவர் அனிலா தெரிவித்தார். ஆண்டிற்கு 3 கோடி பால் பாயின்ட் பேனாக்கள் செயலிழக்க செய்யப்படுகிறது. இது பெரும் ஆபத்தாகும். என்றார் அவர்.

ஓவியர்கள் மத்தியில் இங்க் பேனாக்களுக்கு மவுசு அதிகம் உள்ளது. இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் பிரபல ஓவியர் லட்சுமி மேனன் கூறுகையில், பிளாஸ்டிக் கேரி பைகளும், பாட்டில்களும் தான் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை விட அதிக பாதிப்பை மறுசுழற்ச்சிக்கு சிறிதும் வாய்ப்பு இல்லாத வகையில் மிக சிறிய பொருளான இந்த பால் பாயின்ட் பேனாக்கள் ஏற்படுத்துகிறது. இதன் இரும்பு முக்கு மற்றும் இங்க் மண்ணில் தான் புதைகிறது.
பயன்படுத்தப்பட்ட 10 ஆயிரம் பால் பாயின்ட் பேனாக்களை சேகரிக்கும் திட்டத்தோடு இந்த இயக்கத்தை மேற்கொண்டேன். ஆனால், தற்போது 70 லட்சம் பேனாக்களை பெற்றுள்ளேன். மேலும், பலர் இதை கொடுக்க என்னை தொடர்வு கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் இந்த இயக்கத்தை நிரந்தரமாக செய்ய திட்டமிட்டுள்ளேன் என்றார். இந்த திட்டத்தை வழிநடத்தி செல்ல லட்சுமிக்கு லண்டனில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. .