செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சாட்ஜிபிடி செயலிகள் போன்றவற்றின் பயன்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்பது இன்னும் சில ஆண்டுகளில் செயல்படுத்த வாய்ப்புள்ளது.

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் கிறிஸ்டோபர் பிஸ்ஸரைட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ்-சில் பேராசிரியராக பணியாற்றி வரும் கிறிஸ்டோபர் பிஸ்ஸரைட்ஸ், கணினிமயமாவதால் பணியிடங்களில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

அவரது கூற்றுப்படி சாட்ஜிபிடி மற்றும் AI தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் முடிக்க முடிவதால் இன்னும் சில ஆண்டுகளில் இதன் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ’90களின் இறுதியில் கணினிமயமாக்கலின் போது தொழிலாளர்கள் பலரும் வேலையிழக்க நேரிட்டதுபோல் வரும் ஆண்டுகளில் கணினித் துறையில் பணியாற்றும் (white-collar) பலரும் வேலையிழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் பணியிழக்க நேரிடும் என்றும் மீதமுள்ளவர்களும் இந்த தொழில்நுட்பம் மூலம் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே பணிபுரிந்தால் போதும் என்ற அளவிற்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சாட்ஜிபிடி மற்றும் AI உதவியுடன் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என்றும் அதேவேளையில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அது உதவும் என்றும் தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.