பெங்களுரு: நிலவின் வெப்பநிலை என்ன? என்பது குறித்து  சந்திரயான்3  விக்ரம் லேண்டர் ஆய்வு  செய்துள்ளதாக,  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.

நிலவின் தென்துருவத்தில் முதல்முறையாக காலடி வைத்து, உலக  சாதனை படைத்துள்ளது இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்3 விண்கலம். இதுவரை உலகின் எந்தவொரு நாடும் செய்யாத சாதனையை இந்தியா செய்துள்ளது. நிலவின் விண்கலம் காலடி வைத்த இடம் சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் மற்றும் அதில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் இயந்திரங்களின் பயன்பாடுகள், அதன் ஆய்வுகள் குறித்து  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை வழங்கி வருகிறது.

அதன்படி, தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில்,  நிலவின்  தென்துருவ மேற்பரப்பின் வெப்பநிலை அதிகபட்சமாக 70 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதாக ‘விக்ரம்’ லேண்டரின் முதல்கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டு உள்ளத.

 இஸ்ரோ செலுத்திய ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் மூலமாக ‘விக்ரம்’ லேண்டா் கடந்த 23-ஆம் மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி, நிலவின் தென்துருவப் பகுதியில்  வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அதையடுத்து,  லேண்டரில் இருந்து ரோவர் இயந்திரம் தரையில் இறங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  விக்ரம் லேண்டரில்  இதற்காக பல்வேறு கருவிகள், சென்சார்கள் அதில் பொருத்தப்பட்டு உள்ளன.  அந்த கருவிககள் மூலம் கிடைக்கும் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களைக்  கொண்டு இஸ்ரோ ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 நிலவின் மேற்பரப்பு மற்றும் அடிப்பரப்பு வெப்பநிலைகளை அளவிடுவதற்கான கருவிகளின் மூலம் நிலவின் மேற்பரப்பு மற்றும்  நிலத்துக்கு அடியே 10 சென்டி மீட்டா் வரையிலும் நிலவும் வெப்பநிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது, அந்த ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.

அக் அதன்படி, நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகபட்சமாக 70 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், தரைப் பகுதிக்கு அடியே 8 செ.மீ. ஆழத்தில் வெப்பநிலையானது மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. மேலும், நிலவின்  4 செ.மீ. ஆழத்தில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், 2 செ.மீ. ஆழத்தில் 40 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.

இது தொடா்பாக, செய்தியாளரிடம்  பேசிய இஸ்ரோ விஞ்ஞானி பி.ஹெச்.எம். தாருகேஷா, ‘நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பு வெப்பநிலை அதிகபட்சமாக 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும் என நினைத்தோம். ஆனால், அது 70 டிகிரி செல்சியஸாக உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  பூமியின் மேற்பரப்புக்கும் அடிப்பகுதிக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபாடு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும். ஆனால், நிலவின் தென்துருவத்தில் இந்த வேறுபாடு சுமாா் 50 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இந்தத் தரவுகள் நிலவு தொடா்பான கூடுதல் ஆய்வுக்குப் பெருந்துணையாக இருக்கும்’ என்றாா்.