பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு

Must read

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. 80 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வழங்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று அம்பிகா சோனி சந்தித்துப் பேசினார். அப்போது ராகுல் காந்தியிடம் பேசிய அம்பிகா சோனி, பஞ்சாப் முதல்வராகப் பதவி ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதுடன்,  சீக்கியர் ஒருவரை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் டிவிட்டரில் அறிவித்தார்.
பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டது குறித்துப் பேசிய சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, இந்த முடிவு கட்சி மேலிடம் எடுத்துள்ள முடிவு. இந்த முடிவை வரவேற்கிறேன். இந்த முடிவால் நான் அதிருப்தி அடையவில்லை என்று தெரிவித்தார்.

More articles

Latest article