அமெரிக்காவின் பிரபல யூ டியூபர் காய் செனட், நேரடி ஒளிபரப்பு மற்றும் கேம் ஷோ மூலம் இளைஞர்கள் மற்றும் டீனேஜர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.

65 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட இவரது வீடியோக்கள் ஒவ்வொன்றும் யூ டியூபில் 1 மில்லியன் வியூஸ்களுக்கு மேல் பெற்றுள்ளது.

யூ டியூபில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சபஸ்க்ரைபர்களைக் கொண்ட இவர் இதுவரை 299 வீடியோக்களை வெளியிட்டு 276 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளார்.

சிறார்கள், டீனேஜர்கள், இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக வலம்வரும் இவர் நியூயார்க் நகரில் உள்ள யூனியன் ஸ்கொயர் பூங்காவில் நேற்று மாலை 4 மணிக்கு நல திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக அறிவித்தார்.

இதனால் பிற்பகல் 1:30 மணிக்கே கூட்டம் அலைமோத துவங்கிய நிலையில் 3 மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் போனது.

இந்த நிலையில் உதவிப் பொருட்களை வழங்க வந்த காய் செனட்-டை சூழ்ந்து கொண்ட ரசிகர்களால் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

பாதுகாப்பிற்காக வந்த போலீசார் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய நிலையில் காய் செனட்-டை கைது செய்து ஹெலிகாப்டர் மூலம் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதனால் சிறிது நேரம் அந்தப்பகுதியே கலவரமானது இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததுடன் 30 சிறார்கள் உட்பட 65 பேரை கைது செய்துள்ளனர்.

தவிர, காய் செனட் மீது கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.