சென்னை

ங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் நேற்று லேசான மழை காணப்பட்டது.

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று  கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.