சென்னை: காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு டிசம்பர் 16ந்தேதி புதிய மசோதாவை அறிமுகம் செய்தது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட’ (VB- G RAM G) மசோதாவை மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, டி.ஆர். பாலு, ஜோதிமணி உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தியின் புகைப்படங்களை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் புதிய மசோதாவுக்கு எதிராகப் பேசினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்களின் தலைப்புகளில் ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்ட இந்தி வார்த்தைகளைப் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருவதாகக் கூறியதுடன், இந்த நடைமுறை இந்தி பேசாத குடிமக்களுக்கும் மாநிலங்களுக்கும் நியாயமற்றது என்று அவர் கூறினார்.
இத்தகைய தலைப்புகள் பலருக்கு மசோதாக்கள் மற்றும் சட்டங்களின் பெயர்களை அடையாளம் காணவோ, புரிந்துகொள்ளவோ அல்லது உச்சரிக்கவோ கடினமாக ஆக்குகிறது என்று தெரிவித்தார். “நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்களின் தலைப்புகளில் ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்ட இந்தி வார்த்தைகளை அரசாங்கம் பயன்படுத்தும் அதிகரித்து வரும் நடைமுறைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்,” என்று சிதம்பரம் கூறினார்.

சுமார் 75 ஆண்டுகளாக, நாடாளுமன்றம் ஒரு தெளிவான மற்றும் எளிமையான நடைமுறையைப் பின்பற்றி வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். மசோதாக்களின் ஆங்கிலப் பதிப்பில் ஆங்கிலத் தலைப்புகளும், இந்திப் பதிப்பில் இந்தித் தலைப்புகளும் பயன்படுத்தப்பட்டன. அவரது கூற்றுப்படி, இந்த அமைப்பு சீராகச் செயல்பட்டதுடன், ஒருபோதும் எந்தப் பிரச்சினைகளையும் உருவாக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், “மசோதாக்களின் பெயர்களை இந்தயில் வைப்பது ஹிந்தி பேசாத மக்களுக்கும், மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் ஒரு அவமதிப்பாகும். இதுவரை, மசோதாவின் பெயர்கள் ஆங்கிலப் பதிப்பில் ஆங்கிலத்திலும், ஹிந்திப் பதிப்பில் ஹிந்தியிலும் எழுதும் நடைமுறை இருந்தன. 75 ஆண்டுகளாகப் அந்த நடைமுறையில் யாரும் எந்தச் சிரமத்தையும் சுட்டிக்காட்டாதபோது, புதிய மாற்றத்தைச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த மாற்றத்தால் ஹிந்தி பேசாத மக்களால் சட்டங்களை அடையாளம் காணவும், உச்சரிக்கவும் முடியாது. நமது நாட்டில் ஆங்கிலம் ஒரு துணை அலுவல் மொழியாகத் தொடரும் என்ற வாக்குறுதி மீறப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறேன் என்றார்.
மேலும், 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம், மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றுதல் என 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதாவுக்கு கண்டம் தெரிவித்தவர்,
மகாத்மா காந்தி அவர்களின் பெயரை அழித்து விட்டு புதிய சட்டம், புதிய திட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியடிகளைக் கொலை செய்ததைவிடக் கொடிய செயல். காந்தியடிகளின் மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு, எவ்வளவு காழ்ப்புணர்வு என்பதை இந்த ஒரு செயலே அம்பலப்படுத்துகிறது.
காந்தியடிகளின் பெயரையும் நினைவையும் அழித்து விட்டு யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.
இந்தியாவின் வரலாறு 2014ம் ஆண்டிலே தான் தொடங்கியது என்று பறைசாற்றியவர்கள் இன்னும் எத்தனை கொடுமைகளச் செய்வார்கள் என்று பார்க்கலாம்.
தென்னாட்டை பின்பற்றி வடநாடு ஒரு நாள் திரும்பும் என்ற நம்பிக்கையில் இந்த நாட்டின் எளிய மக்கள் வாழ்கிறார்கள்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.