சென்னை

டிகர் ரஜினிகாந்த் நடவடிக்கையை சிபிஎம் கட்சி புகழ்ந்துள்ளது/

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவாக இருந்தார், நடிகர் ரஜினிகாந்த்.
இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை மத குருமார்கள் தூண்டிவிடுவதாக அவர் தெரிவித்த கருத்து,சர்ச்சையை  ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினியின் நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

மத்திய அரசுக்கு ஆதரவாகவே சமீப காலமாகப் பேசி வரும் அவர், டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் கலவரமாக உருவெடுத்த நிலையில், ’’உள்துறையின் தோல்வியே இதற்குக் காரணம்’’  என்று கண்டித்தார்.  அரசியல் அரங்கில் அவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், நேற்று இஸ்லாமியக் குருமார்களைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.

பின்னர் அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்’’ அமைதியை நிலைநாட்ட அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார். ரஜினியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மனம் திறக்கிறார்

.‘’ டெல்லி கலவரம் எல்லோரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.இதைக் கண்டிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த்தும் உணர்ந்திருக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்துப் பேசுவதற்கு முன்பாக அவர், அனைத்து தரப்பினரிடமும் கருத்துக் கேட்டிருக்க வேண்டும்’’ என்று கூறியவர் தொடர்ந்தார்.

‘’ நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை எதற்கும் குடியுரிமை சட்டம் தீர்வு காணப் போவதில்லை.மாறாக மக்களைப் பிளவு படுத்தி, கலவரச்சூழலைத்தான் உருவாக்கியது. அதனை ரஜினி இப்போது உணர்ந்துள்ளார்.அதனால் தான் தனது முந்தைய நிலையை மாற்றிக்கொண்டுள்ளார். ரஜினி, பா.ஜ.க.ஆதரவாளர் என்று நான் நினைக்கவில்லை.அவரது கருத்துக்கள் பா.ஜ.க.பக்கம் அவர் இருப்பது போல் காட்டியிருக்கலாம்.

ரஜினியிடம் மாற்றம் தெரிகிறது. இல்லையென்றால் ஏன் இஸ்லாமியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச வேண்டும்?தனது நிலையில் விடாப்பிடியாக இல்லாமல் மாற்றிக்கொண்டிருப்பது நல்ல விஷயம்’’ என்று ரஜினியை , ’செல்லமாக’ புகழ்ந்த கே.பாலகிருஷ்ணனிடம் ’ரஜினியின் அரசியல் தமிழகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?’’ என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

‘’ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பின்னர் தான் அதனைக் கணிக்க முடியும். நாட்டில் நிலவும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அவரது நிலைப்பாடு தெரிய வேண்டும்’ என்று பதில் அளித்தார், தோழர், பாலகிருஷ்ணன்..

– ஏழுமலை வெங்கடேசன்