ஸ்ரீஹரிகோட்டா

ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு வந்துள்ளது.

 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)  விண்ணில் செலுத்தியது. இது 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையைச் சென்றடைந்தது. ஆயினும், எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிட்டபடி ‘லேண்டர்’ கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது.  ஆனால் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ‘ஆர்பிட்டர்’, நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரோ, ரூ.615 கோடியில் சந்திரயான்-3 திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. நிலவை ஆர்பிட்டர் ஏற்கனவே சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள், சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக சந்திரயான்-3 விண்கலம் வரும் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த பணிக்கான முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  சில நாட்களுக்கு முன்பு விண்ணில் செலுத்துவதற்கான முன்கட்டப் பணிகளுக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சந்திரயான்-3 விண்கலம் கொண்டு வரப்பட்டது.

விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட  உள்ளன. பிற்கு இறுதிக்கட்ட சோதனைகள் நடந்து ஏவுதளத்துக்கு ராக்கெட் கொண்டு செல்லப்படும். முந்தைய சந்திரயான்-2 போல அல்லாமல், 42 நாட்களில் லேண்டர் கலனை நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.