பெங்களூரு: சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட தயாராகும், சந்திராயன்3 அடுத்தஆண்டு விண்ணில் செலுத்த திட்டடப்பட்டு உள்ளதாகவும், 2023 ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்படப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
இஸ்ரோ சார்பில், ஏற்கனவே சந்திராயன்1, சந்திராயன்2 விண்கலங்கள் அனுப்பி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்( இஸ்ரோ) விண்ணில் செலுத்தியது. ஆனால், சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி தரையிறங்காமல் லேண்டர் நிலவின் தரையில் மோதி உடைந்தது. அதேநேரத்தில், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல்வேறு அரிய புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது.
இந்த நிலையில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் தயாராகி வருகிறது. இதை அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ திட்டமிப்பட்டு வருவதாக தெரிவித்த இஸ்ரோ, தற்போது ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உளளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் தயாராக உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்னைகள் இதில் இருக்காது. சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றவர், இந்த விண்கலத்தில், ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றிவருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டின் முதல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யா’ திட்டத்தின் முதல் பரிசோதனையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என சோம்நாத் கூறினார்.