ஸ்ரீஹரிக்கோட்டா:
நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்ளும் சந்திரயான் 3 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

உலக நாடுகளே உற்று நோக்கிய சந்திரயான் 3 சரியாக மதியம் 2.35 மணி அளவில் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதற்கான 25 மணி நேர 30 நிமிட கவுண்டவுன் நேற்று மதியம் 1.05 மணிக்கு தொடங்கியது.

கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சியிலும் விஞ்ஞானிகள் செயல்பட்டனர். அந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சந்திரயான்-3 மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் இன்ஜினின் சோதனை அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.

சந்திரயான் 3 விண்கலத்தில் laser doppler velocity metre எனப்படும் புதிய சென்சார் கருவியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளிப்படும் லேசர் ஒலி மூலம், மூன்று வேக திசையான்களின் (Three velocity Vectors) தகவல்களை பெற முடியும். மேலும், இன்ஜின் பிரச்னை, உந்துதல் இடையூறு, சென்சார் செயலிழப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய லேண்டர் கருவியின் எடை 200 கிலோ அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் லேண்டிங்கின் போது குறைந்தது 2 இன்ஜின்கள் செயல்படுவது அவசியம். அதன் காரணமாகவே எடையை குறைக்கும் நோக்கில், சந்திரயான் – 2 விண்கலத்தில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட மத்திய இன்ஜின் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

இப்படி பலமுறை சோதனை செய்தபின், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட பின் விஞ்ஞானிகளால் மிகவும் கவனமாக சந்திரயான் 3 உருவாக்கப்பட்டது. பலரின் கனவு மெய்ப்படும் வகையில் இன்று இஸ்ரோ வரலாற்றுச் சாதனையாக இன்று வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டது.

இது குறித்து பேசிய சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல், சந்திரயான் 3 விண்கலம் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான் 3-ன் அனைத்து செயல்பாடுகளும் சரியாக உள்ளது நிலவில் சந்திரயான் இறங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.