பூமியை கடந்து நிலவை நோக்கி செல்கிறது சந்திரயான்-2! இஸ்ரோ

Must read

ஸ்ரீஹரிகோட்டா:

நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-2 புவி வட்டப்பாதையை கடந்து,  தற்போது நிலவை நோக்கி  பயணமாகி வருகிறது. நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான்2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செலுத்தி உள்ளனர்.

கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், கடந்த 22 நாட்களாக புவி வட்டப் பாதையை சுற்றி வந்தது. அவ்வப்போது அதன் சுற்று வட்டப்பாதை 5முறை  உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலை புவி வட்டப்பாதையை கடந்து நிலவை நோக்கி பயணத்தை தொடங்கி உள்ளது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் திட்ட செயல்பாடுகளுக்கான வளாகத்தில் இருந்து சந்திரயான் 2 விண்கலத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.  முன்னதாக  சந்திரயான்2 விண்கலம்  நீள் வட்டப் பாதையில் புவியை சுற்றி வந்த நிலையில், இன்று (புதன் கிழமை)  அதிகாலை 2.21 மணி அளவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்2-ஐ புவி வட்டப் பாதையில் இருந்து விலக்கி, அதில் உள்ள திரவ எரிபொருள் எஞ்சினை இயக்க வைத்தனர். அதைத்தொடர்ந்து  நிலவின் வட்டப் பாதையை நோக்கி சந்திரயானை  திருப்பி விட்டனர். இதையடுத்து, தற்போது சந்திரயான்2 நிலவை  நோக்கி தனது பயணத்தைத் தொடங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக வரும் 20ம் தேதி அன்று சந்திரயான்2 நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் செலுத்தப்படும்.

நிலவுக்கு அருகே 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்று வட்டப் பாதையை சந்திரயான் 2 அடைந்த தும், விக்ரம் லேண்டர் மூலம், பிரக்யான் ரோவர் நிலவில் தரை இறக்கப்படும். செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அது நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். நொடிக்கு ஒரு செண்டி மீட்டர் என்ற வேகத்தில், பிரக்யான் ரோவர் இயங்கும். ஆனால் விக்ரம் லேண்டரை நிலவில் தரை இறக்கும் அந்த 15 நிமிடங்கள் பரபரப்பாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

அது பிறந்த குழந்தையை முதன் முதலாக கையில் ஏந்துவதற்கு ஒப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article