டில்லி

தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு எதிரான அணி அமைப்பது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திய சந்தித்தார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஓரணி அமைத்து போட்டியிட ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தேர்தலுக்கு முன்பு இருந்தே முயற்சி செய்து வருகிறார். இதை ஒட்டி நடந்த எதிர்கட்சிகளின் கூட்டம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு காங்கிரஸ். பாஜக மற்றும் மாநில கட்சிகள் என மூன்று அணிகள் தேர்தல் களத்தில் இறங்கின.

தற்போது தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என கருத்து நிலவுகிறது. அதை ஒட்டி சந்திரபாபு நாயுடு அனைத்து எதிர்கட்சிகளையும் பாஜகவுக்கு எதிராக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே அவர் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சந்தித்தார்.

இன்று டில்லி சென்றுள்ள சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எதிரான அணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் நாயுடு அனைத்துக் கட்சிகளையும் மக்களவை தேர்தலுக்கு பிறகு ஓரணியில் இணைப்பது குறித்து ராகுல் காந்தியுடன் விவாதித்தார் என கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு இது தொடர்பாக இன்று மாலை பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதியையும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும்  லக்னோவில் சந்திக்க உள்ளார். அத்துடன் அவர் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவி மம்தா பானர்ஜியுடன் இது குறித்து தொலைபேசியில் பேசி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.