சென்னை ‘
சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூலை 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் முதல் தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல இடங்களில் வெப்ப அலை காரணமாக சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. சென்னையில் மட்டும் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. மக்கள் வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மிகவும் அவதி அடைந்தனர்.
பல இடங்களில் கோடை மழை கொஞ்சம் வெக்கையை தணித்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவு, சென்னையில் பல இடங்களில் சூரைகாற்றுடன் கூடிய கனமழை பெய்து அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 9 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவானது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 26-27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது., தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூலை 10ம் தேதி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.