டெல்லி

விரைவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ. 4 வரை விலை குறையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பது பற்றி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல் பங்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பான அறிவிப்புகளை ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. நாளை முதல் கமிஷன் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இந்த பதிவுகளை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் 88 ஆயிரம் பெட்ரோல் பங்குகளின் 7 ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இதனால் ஒடிசாவில் பெட்ரோல் விலை 4 ரூபாய் 69 காசுகள் குறை வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளதால் இதே போன்று பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.