சென்னை:

டுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பொழிந்து வருகிறது. தற்போது,
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்,  தென் தமிழகத்தில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு மேலும் 14 செ.மீ. மழை வரவேண்டியுள்ளது. தமிழகத்தின் இதர மாவட்டங்களில் சராசரி அளவிலான மழைப் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாள்களில் மழையின் அளவு படிப்படியாக குறையக்கூடும் என்று தெரிவித்தார்.

சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த இரு நாள்களுக்கு குமரிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.