சென்னை: தமிழகத்தில்  இன்று சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலிலி நிலவும் வளிமண்டல சுழற்றி  இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் வரும் 16 ஆம் தேதி வரை 5 நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று நாகை, மயிலாடுதுறை, கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 15ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழைபெய்து வருகிறது. இதற்கிடையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

அதே வேளையில்,தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும், மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவுக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதன்படி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால், இன்று இரவில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்கள் மழைக்கு தமிழகம் தயாராகி வருகிறது.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.