சென்னை, வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு காரணமாக, தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதுடன், வானமும் மேகமூட்டமாக காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று  வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருச்சி டவுனின் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு அரப்பிக்கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் (அக். 7, 8) சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்.9 முதல் செப்.11-ம் தேதி வரை வங்கக்கடல் பகுதியில் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.